Thursday, 17 December 2015

இதயத்துடிப்பு முடக்கம்



திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest)
மாரடைப்புக்கும் ‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
இதயத்துடிப்பு திடீரென முடங்குவதற்கு ‘சீரற்ற இதயத்துடிப்பு’ எனப்படும் அரித்மியா உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம்தான் மாரடைப்பு.
மாரடைப்பு வரும்போது அறிகுறிகள் தெரியும்; இதயத்துடிப்பு இருக்கும்.
மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினைவோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக அவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம்.
திடீர் இதயத்துடிப்பு முடக்கம், மாரடைப்பை விடவும் தீவிரமான சிக்கல். இது, ஏற்பட்டால் உடனடியாக சுயநினைவை இழந்து, மரணம் நேரிடலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
திடீரென ஒருவர் நம் கண் முன் நிலைகுலைந்து விழுகிறார் எனில், உடனடியாகச் சில விநாடிகளுக்குள் அவரின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்.
எந்த உணர்ச்சியும் இன்றிக் காணப்பட்டால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம்.
அவரது கையில் நாடி பார்ப்பதோ, இதயத்துக்கு அருகில் காதைவைத்துச் சத்தம் கேட்கிறதா எனச் சோதனை செய்வதோ வேண்டாம். அவை எல்லாம் நேரத்தை வீணாக்கும் செயல்கள்.
ஒருவருக்குத் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு ஒவ்வொரு நிமிடமும் 10 சதவிகிதம் குறைகிறது. அதாவது, 10-வது நிமிடம் அவர் நிரந்தரமாக உயிர் இழக்கக்கூடும்.
எனவே, உணர்ச்சியே இல்லை எனில், தாமதிக்காமல் உடனடியாக சி.பி.ஆர் எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும்.
சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation)
சி.பி.ஆர் என்பது இதயத்துக்குச் செயற்கையாக உயிரூட்டல். பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்க வேண்டும்.
அவரைச் சுற்றிக் கூட்டம்போட வேண்டாம். காற்றோட்டம் இருக்கட்டும். முதலில் அவரது சட்டை பட்டன்களை அவிழ்க்கவும்.
நெஞ்சின் மையப்பகுதியின் மீது, வலது அல்லது இடது உள்ளங்கையின் தடிமனான அடிப்பகுதியை வைக்க வேண்டும். இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து, இருகை விரல்களையும் இறுக்கமாகக் கோத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் சுமார் ஐந்து செ.மீ ஆழத்துக்கு வேகமாக அழுத்தம் கொடுத்து, எடுக்க வேண்டும்.
ஒரு நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை இப்படி அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் உணர்வு வரும் வரையிலோ அல்லது அவசரஉதவிப் பிரிவில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர் வரும் வரையிலோ உங்களுக்குக் கடும் சோர்வு ஏற்படும் வரையிலோ, இந்த முதலுதவியைச் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்குச் பக்கவாட்டில் அமர்ந்துதான் இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment